பி.சி.சி.ஐ. தலைவர் பதவி விவகாரம்: கட்சியில் சேராத கங்குலியை அவமதிக்க பா.ஜ.க. முயற்சி; திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
பி.சி.சி.ஐ. தலைவர் பதவி விவகாரத்தில், கட்சியில் சேராத சவுரவ் கங்குலியை அவமதிக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது.
கொல்கத்தா,
பி.சி.சி.ஐ.யின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இருந்து வருகிறார். இந்நிலையில், வருகிற 18-ந்தேதி மும்பையில் பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொது கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட கூடும் என தகவல் வெளியானது. இதற்கேற்ப பின்னி நேற்று தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
பி.சி.சி.ஐ. செயலாளராக பதவி வகிக்கும் ஜெய்ஷா, 2-வது முறையாக தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறும்போது, கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மக்களிடையே பிரபலம் வாய்ந்த சவுரவ் கங்குலி பா.ஜ.க.வில் சேரவுள்ளார் என்ற செய்தியை பரப்ப அக்கட்சி முயற்சித்தது.
ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்த சூழலில், பி.சி.சி.ஐ.யில் 2-வது முறையாக கங்குலி தலைவராக நீடிக்க முடியாத சூழலை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மந்திரி அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா, பி.சி.சி.ஐ. செயலாளராக 2-வது முறையாக தொடர முடியும்.
ஆனால், கங்குலி தலைவராக நீடிக்க முடியாது என்பது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கான ஓர் எடுத்துக்காட்டு என குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும் பா.ஜ.க. தேசிய துணை தலைவர் திலீப் கோஷ் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என மறுத்து உள்ளார். கடந்த மே மாதத்தில் கங்குலி வீட்டுக்கு அமித்ஷா சென்றபோது, தீவிர அரசியலில் கங்குலி ஈடுபட கூடும் என யூகங்கள் வெளிவந்தன.
ஆனால், அமித்ஷாவை நீண்டகாலம் எனக்கு தெரியும் என்ற வகையிலேயே அவர் எனது வீட்டுக்கு வந்து சென்றார் என கங்குலி கூறினார். அரசியலில் ஈடுபட போவதில்லை என்றும் கிரிக்கெட் நிர்வாகத்திலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள போகிறேன் என்றும் அவர் கூறினார்.