தேசியக்கொடி ஏற்றவிடாமல் தடுக்கும் திரிணாமுல் காங். கட்சியினர்; பாதுகாப்பு அளிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய எம்.எல்.ஏ!
தன்னை பாதுகாக்க வேண்டுமென்று எம்.எல்.ஏ. நவுசாத் சித்திக் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில், 2021 சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ(எம்) மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைத்து இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எப்) கட்சி போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜகவைத் தவிர ஒரு இடத்தைப் பெற்ற ஒரே எதிர்க்கட்சி இதுதான்.
இந்நிலையில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.வான நவுசாத் சித்திக் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். தன்னை திரிணாமுல் காங்கிரசாரிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்று அவர் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கடந்த ஆண்டு இந்த நாளின் தேசியக் கொடியை ஏற்றியபோது, பாங்கரில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்னைத் தடுத்தனர். பல கிராமங்களில் தேசியக் கொடியை ஏற்ற முற்பட்ட எனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பல முறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தப் பகுதியில் உள்ள மக்கள் சுதந்திரமாக தேசியக் கொடியை ஏற்றும் வகையில் அவர்களின் பாதுகாப்பை தயவு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எனது தாழ்மையான மற்றும் அவசரமான வேண்டுகோள் ஆகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.