ஆன்லைன் கேம் 'பாஸ்வேர்டு' பகிராததால் ஆத்திரம்: இளைஞனை கொன்று தீ வைத்து எரித்த நண்பர்கள்
இளைஞனை கொன்று தீ வைத்து எரித்த நண்பர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாபி தாஸ் (வயது 18). கடந்த 10ம் தேதி காலை வீட்டை விட்டு வெளியேறிய பாபி தாஸ் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மகன் எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பாபியின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், முர்ஷிதாபாத் அருகே உள்ள வனப்பகுதியில் எரிந்த நிலையில் பாபியின் உடலை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பாபியின் நண்பர்களான 4 சிறுவர்களை கைது செய்தனர்.
அந்த சிறுவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாபியை கொன்று, உடலை தீ வைத்து எரித்ததை ஒப்புக்கொண்டனர். செல்போனில் விளையாடும் பிரி பையர் என்ற ஆன்லைன் கேமின் பாஸ்வேர்டை கேட்டதாகவும் அதை பாபி கொடுக்காததால் அவரை கொலை செய்ததாகவும் சிறுவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, 4 சிறுவர்களையும் கைது செய்த போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.