மென்பொருள் ஏற்றுமதியில் பெங்களூரு முன்னணி முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
மென்பொருள் ஏற்றுமதியில் பெங்களூரு, முன்னணியில் உள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:-
பலமான அடித்தளம்
பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்து பேசியதாவது:-
தொழில்நுட்ப வளர்ச்சியை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டியது நமது கடமை. நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை கர்நாடகம் முன்னெடுக்க வாய்ப்பு உள்ளது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பலமான அடித்தளம் அமைத்து கொடுத்தார். தொழில்நுட்பம், உள்கட்டமைப்புகளில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன.
புத்தொழில் நிறுவனங்கள்
முதல் முறையாக 1992-ம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு தகவல் தொழில்நுட்ப கொள்கையை கொண்டு வந்தது. அந்த கொள்கை நாட்டிற்கே முன்மாதிரியாக இருந்தது. பெங்களூரு தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகராக விளங்குகிறது. மென்பொருள் ஏற்றுமதியில் பெங்களூரு முன்னணியில் உள்ளது. உலக அளவில் மென்பொருள் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தை பிடிக்க அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.
ஆராய்ச்சி நிறுவனங்கள் பெங்களூருவில் அதிகமாக உள்ளன. காலநிலை மாற்றம், சைபர் பாதுகாப்பு போன்ற உலக அளவிலான பிரச்சினைகளை எதிர்கொள்ள கர்நாடகம் தனது சக்தியை பயன்படுத்தும். ஆராய்ச்சி துறையில் புத்தொழில் நிறுவனங்கள் ஜீவநாடியாக உள்ளன. இந்த துறையின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய கர்நாடக அரசு தயாராக உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பொது போக்குவரத்து பலப்படுத்தப்படும். மெட்ரோ ரெயில் வசதிகள் அதிகரிக்கப்படுகின்றன. தேவனஹள்ளி பகுதியில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம் விரைவில் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது. ஆனேக்கல், தொட்டபள்ளாபுரா உள்ளிட்ட பகுதிகளில் அதிக முதலீடுகள் வருகின்றன. மங்களூருவில் தொழில்நுட்ப பூங்கா தொடங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதற்காக சாலை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.