சித்தராமையா ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பு தான் வளர்ந்தது


சித்தராமையா ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பு தான் வளர்ந்தது
x

சித்தராமையா ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அவரது ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பு தான் வளர்ந்தது என பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் குற்றம்சாட்டி உள்ளார்.

மைசூரு:-

அருண்சிங் பேட்டி

கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு மற்றும் மக்களின் நலனுக்காக இரட்டை என்ஜின் அரசு மீண்டும் கர்நாடகத்தில் வர வேண்டும். நாட்டின் வளர்ச்சி கர்நாடகவின் வளர்ச்சியுடன் இணைந்தே செல்கிறது. இந்த கருத்தை பிரதமர் மோடி கூறியுள்ளார். கிருஷ்ணராஜா தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராமதாசுக்கு இந்த முறை டிக்கெட் கொடுக்கவில்லை. இருப்பினும் அவர் கட்சி பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நடைமுறை பா.ஜனதாவில் மட்டுமே சாத்தியம். ராமதாசுக்கு எனது பாராட்டு.

பி.எப்.ஐ. அமைப்பு மட்டுமே வளர்ச்சி

காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டனர். கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போதும் இதே நிலை தான் நீடித்தது. பி.எப்.ஐ. மாநிலத்தில் ஒரு பிரச்சினையாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக சமூகநீதிக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. நீங்கள் ஆட்சியில் இருந்த போது ஏன் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை?. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடாக வழங்கிய 4 சதவீதத்தை நாங்கள் தலா 2 சதவீதம் வீதம் லிங்காயத் மற்றும் ஒக்கலிகருக்கு வழங்கினோம்.

ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அந்த இடஒதுக்கீட்டை திரும்ப பெறுவோம் என கூறுகிறது. யாரிடம் இருந்து அந்த கட்சி இடஒதுக்கீட்டை திரும்ப பெறும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி ஒரு உடைந்த வீடு போன்றது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது மாநிலத்தில் பி.எப்.ஐ. அமைப்பு தான் வளர்ந்தது. மற்றப்படி வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை

மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசின் 40 சதவீத ஊழல் குற்றச்சாட்டு பொய்யானவை. இந்த குற்றச்சாட்டில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது மக்களுக்கு தெரியும்.

பி.எல்.சந்தோஷ் நல்ல மனிதர். கட்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்து உழைத்து வருகிறார். அவரை பற்றி குைற கூறுவது சரியல்ல. பா.ஜனதாவிடம் இருந்து பதவி, அதிகாரத்தை பெற்றுக்கொண்டு ஜெகதீஷ் ஷெட்டர் இவ்வாறு பேசுவது சரியல்ல. காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story