கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை போதனைகள்- மந்திரி பி.சி.நாகேஸ் தகவல்
கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை போதனைகள் சேர்க்கப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர் பிரானேஷ் கேட்ட கேள்விக்கு பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தற்போது உள்ள பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் பகவத்கீதை போதனைகள் சேர்க்கப்படாது. அத்தகைய எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால் வருகிற டிசம்பர் மாதம் முதல் இந்த பாடத்திட்டத்தில் தார்மீக பாடத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அந்த பாடத்தில் பகவத்கீதை போதனைகளை சேர்த்து குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் பகவத்கீதை சேர்க்கப்படும். பாபாபுடன்கிரி மலை குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத்தில் சில தவறுகள் இருப்பதாக உறுப்பினர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே பாடப்புத்தகங்களில் இடம் பெற்ற தவறுகளை சரிசெய்யும் பணியை மேற்கொண்டுள்ளோம். அதே போல் அந்த தவறும் சரிசெய்யப்படும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.