தேர்வு அடிப்படையில் புதிய கார்களுக்கு நட்சத்திர மதிப்பீடு - நிதின் கட்காரி தகவல்


தேர்வு அடிப்படையில் புதிய கார்களுக்கு நட்சத்திர மதிப்பீடு - நிதின் கட்காரி தகவல்
x

தேர்வு அடிப்படையில், புதிய கார்களுக்கு நட்சத்திர மதிப்பீடு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதின் கட்காரி கூறினார்.

புதுடெல்லி,

மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- புதிய கார்களுக்கு நட்சத்திர மதிப்பீடு அளிக்கும் முறை தொடர்பான வரைவு அறிவிப்பாணைக்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன். 'பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை' அறிமுகப்படுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது.

அதன்படி, புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட கார்களுக்கு தேர்வு நடத்தப்படும். அதில் அவற்றின் செயல்பாடு அடிப்படையில், நட்சத்திர மதிப்பீடு அளிக்கப்படும்.

இத்திட்டம், நுகர்வோர் நலனுக்கு உகந்ததாக இருக்கும். நட்சத்திர மதிப்பீடு அடிப்படையில், பாதுகாப்பான கார்களை நுகர்வோர் தேர்வு செய்ய முடியும். அத்துடன், பாதுகாப்பான வாகனங்களை உற்பத்தி செய்வதில், உற்பத்தியாளர்களிடையே ஆரோக்கியமான போட்டி உருவாகும்.

மேலும், இந்திய கார்களின் ஏற்றுமதி தரம் அதிகரிக்கும். புதிய கார் மதிப்பீட்டு திட்ட விதிமுறைகள், சர்வதேச கார் சோதனை விதிமுறைகளுக்கு ஏற்றபடி இருக்கும்.

இத்திட்டம், நமது ஆட்டோமொபைல் தொழிலை தற்சார்புடன் இயங்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், உலகத்தில் இந்தியாவை முன்னணி ஆட்டோமொபைல் கூடமாக மாற்ற உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story