குண்டர்களுடன் சென்று குடிபோதையில் யூ-டியூபரை தாக்கிய பிக்பாஸ் பிரபலம்


குண்டர்களுடன் சென்று குடிபோதையில் யூ-டியூபரை தாக்கிய பிக்பாஸ் பிரபலம்
x

சாகர் தாக்குர் என்பவர் மேக்ஸ்டெர்ன் என்ற பெயரில் 2017-ம் ஆண்டில் இருந்து யூ-டியூபில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குருகிராம்,

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பரில் கோட்டா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பாம்பு விஷம் இருந்தது. தொடர்ந்து, 5 நாக பாம்புகள் உள்ளிட்ட 9 பாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

5 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதில், பிக் பாஸ் ஓ.டி.டி. வெற்றியாளர் மற்றும் பிரபல யூ-டியூபரான எல்விஷ் யாதவ் (வயது 26), நொய்டா நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு பாம்புகள் மற்றும் பாம்பு விஷம் ஆகியவற்றை சப்ளை செய்தது தெரிய வந்தது.

சட்டவிரோத வகையில் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் எல்விஷ், கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு, பாம்புகள் மற்றும் பாம்பு விஷம் ஆகியவற்றுடன் வீடியோக்களை எடுத்து வருகிறார் என்றும் நொய்டா மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் விருந்து நிகழ்ச்சிகளில் வீடியோ எடுத்து வருகிறார் எனவும் விலங்குகள் நல அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோட்டா நகரில் எல்விஷ் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் நொய்டா போலீசார் அவரை விடுவித்தனர்.

இந்த நிலையில், எல்விஷ் யாதவ், மற்றொரு யூ-டியூபரான சாகர் தாக்குர் என்பவரை கடுமையாக தாக்கி உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரியானாவின் குருகிராம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பற்றிய வீடியோ ஒன்றும் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

சாகர் தாக்குர் என்பவர் மேக்ஸ்டெர்ன் என்ற பெயரில் 2017-ம் ஆண்டில் இருந்து யூ-டியூபில் ஆக்டிவாக இருந்து வருகிறார். பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார். அதில், கேமிங் எனப்படும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு தொடர்புடைய விசயங்களை உருவாக்கி, பதிவாக வெளியிடுவதில் பிரபலம் அடைந்தவர்.

இந்நிலையில், அவரை எல்விஷ் யாதவ் கடுமையாக தாக்கி உள்ளார். இதுபற்றி சாகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 2021-ம் ஆண்டு முதல் அவரை தெரியும். கடந்த சில மாதங்களாக, எல்விஷின் பக்கங்களில் வெறுப்புணர்வை தூண்ட கூடிய வகையிலான விசயங்கள் பரப்பப்பட்டன.

இது தனக்கு மனவருத்தம் ஏற்படுத்தியது. இதற்காக கவுன்சிலிங் சென்றேன் என தெரிவித்து உள்ளார். இந்நிலையில், அவரை சந்திக்க வரும்படி எல்விஷ் கூறினார். அது பேசுவதற்காக என நினைத்து சென்றுள்ளார்.

ஆனால், சாகர் சென்றபோது 8 முதல் 10 குண்டர்கள் இருந்தனர். நன்றாக குடிபோதையில் இருந்த அவர்கள் சாகரை அடித்து, உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரை உடல்ரீதியாக முடக்க முயற்சித்து உள்ளனர். நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

எல்விஷ் தாக்குதல் நடத்தி விட்டு புறப்பட்டு செல்வதற்கு முன், கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் ஏறக்குறைய சுயநினைவற்ற நிலைக்கு சாகர் சென்றுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story