தந்தை உள்பட பல ஆண்களால் பலாத்காரம் சமூகவலைதளம் மூலம் உதவி கேட்ட சிறுமி
தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்று வருவதாகவும், பல ஆண்களால் தான் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
பாட்னா
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை வெளியிட்டு உதவி கோரியுள்ளார். அவர் வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி உள்ளார்.
தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்று வருவதாகவும், பல ஆண்களால் தான் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்
கிராமத்தின் தலைவர், போலீஸ் அதிகாரி உள்ளிட்டோரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்த சிறுமி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பலாத்கார சம்பவங்கள் அனைத்தும் அந்தச் சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்குத் தெரிந்தே நடந்துள்ளது. அதை அவர்கள் அனுமதித்து உள்ளனர்.
இது தொடர்பாக அந்த சிறுமி கூறியதாவது:-,
தினமும் 20 முதல் 25 பேர் என்னை பலாத்காரம் செய்வார்கள். என் அம்மா வீட்டில் மது விற்பனை செய்கிறார். போலீஸ் நிலையத்தில் உள்ள போலீஸ்காரர்களும் வீட்டிற்கு வந்து மது அருந்திவிட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
எனக்கு வாழவே பிடிக்கவில்லை. வீட்டில் யாரும் எனக்கு உதவ மாட்டார்கள். இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள் தான் எனக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நிச்சயம் என்னைக் கொன்றுவிடுவார்கள்.
போலீஸ் அதிகாரிகள் பலரும் என்னை பலாத்காரம் செய்துள்ளனர். மாவட்ட எஸ்ஐ மனோஜ் சிங் கூட என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதன் காரணமாகவே போலீசுக்கு போகவில்லை.
ஒரு கட்டத்தில் என்னால் தாங்க முடியவில்லை. இதனால் நான் நேரடியாக கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து தகவல் கொடுத்துவிட்டேன். அப்போது போலீசார் வந்து எங்கள் வீட்டில் முழுமையாகச் சோதனை நடத்தினர். இருப்பினும், அப்போது போலீசாருக்கு பணத்தைக் கொடுத்துச் சமாளித்துவிட்டனர். இதனால் என் மீது கடும் கோபமடைந்த என் அப்பாவே என்னை பலாத்காரம் செய்தார் என்று கண்ணீர் மல்க கூறி உள்ளார்.
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் அடிப்படையில் சிறுமியின் தாய், தந்தை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தச் சிறுமியின் தந்தை எலக்ட்ரானிக் கருவி கடை வைத்துள்ளார். அவரது அம்மா வீட்டில் முறைகேடாக மது விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறுமி ஒருவர் அவரது குடும்பத்தினரே அவரை பலாத்காரம் செய்ய அனுமதித்ததாக கூறி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 3 பேரைக் கைது செய்துள்ளனர் என கூறினார்.