பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு; விசாரணை நவம்பர் 29-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு: சுப்ரீம் கோர்ட்டு


பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு; விசாரணை நவம்பர் 29-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு:  சுப்ரீம் கோர்ட்டு
x

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 29-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்து உள்ளது.


புதுடெல்லி,


குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, மகுவா மொய்த்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுக்களை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அதில், விடுவிக்கப்பட்ட 11 பேரும் பதில் அளிக்கவும், கருணை அடிப்படையில் விடுவித்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கும் கடந்த மாதம் 9-ந்தேதி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, குஜராத் அரசின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர் என சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என, தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக மத்திய, மற்றும் மாநில அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என கோர்ட்டு தெரிவித்தது. மேலும், விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் இந்த வழக்கில் இணைந்து கொள்ளவும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது நடத்தப்படும் விசாரணையை வருகிற நவம்பர் 29-ந்தேதிக்கு கோர்ட்டு ஒத்தி வைத்து உள்ளது. குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்திற்கு உரிய பதில்மனு தாக்கல் செய்வதற்கு மனுதாரர்களுக்கு போதிய நேரம் வழங்கப்படுகிறது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் தெரிவித்து உள்ளது.


Next Story