மாநிலங்களவை தேர்தல்: பா.ஜ.க சார்பில் 4 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!


மாநிலங்களவை தேர்தல்: பா.ஜ.க சார்பில் 4 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!
x

மாநிலங்களவை தேர்தலுக்கான ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய நான்கு மாநில பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ராஜ்யசபா தேர்தலுக்கான ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய நான்கு மாநில பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் காலியாகும் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை எம்.பி. தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இந்த நான்கு மாநிலங்களில், பாஜக ஒரு கூடுதல் ராஜ்யசபா வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் ராஜஸ்தானின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மராட்டியத்தில் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரியானாவில், ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்துக்கு, அக்கட்சி சார்பில் தேர்தலை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கலாசாரத்துறை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார்.


பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலுக்கான 22 வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. 2 சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கவும் இக்கட்சி முடிவு செய்துள்ளது.


22 வேட்பாளர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து 8 பேரும், மராட்டியம், கர்நாடகத்தில் இருந்து தலா 3 பேரும், பீகார், மத்தியபிரதேசத்தில் இருந்து தலா 2 பேரும், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் அரியானாவில் இருந்து தலா ஒருவரும் போட்டியிடுகின்றனர்.

இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சிக்கலை கொடுக்கும் விதத்தில் பாஜக தீவிரமாக களம் இறங்கியுள்ளது.அதன்படி, ராஜஸ்தானில், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த தொழிலதிபர் சுபாஷ் சந்திராவுக்கு பாஜக ஆதரவளிக்கிறது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு ராஜ்யசபா இடங்கள் உள்ளன. அதில் காங்கிரஸ் மூன்று வேட்பாளர்களையும், பாஜக ஒரு இடத்திலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸின் மூன்றாவது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, அவர்களுக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற, சிறிய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.

இப்போது ராஜஸ்தானில், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த தொழிலதிபர் சுபாஷ் சந்திராவுக்கு பாஜக ஆதரவளிப்பதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்ய சபாவில் ஒரு எம்.பி பதவி இல்லாமல் போகும்.

மேலும், கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் காங்கிரசுக்கு சிக்கலை உருவாக்கும் விதத்தில் கூடுதல் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அரியானாவில், பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக தாக்கல் செய்த மற்றொரு தொழிலதிபரான கார்த்திகேய சர்மாவின் வேட்புமனுவை பாஜக ஆதரிக்கிறது. இது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கனுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.


Next Story