காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை தோற்கடிக்க பா.ஜனதா முயற்சி; முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு


காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை தோற்கடிக்க பா.ஜனதா முயற்சி; முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை தோற்கடிக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு:

அரசியல் நோக்கம்

கர்நாடக தலித் சங்கங்கள் சார்பில் 'பீம சங்கல்ப' மாநாடு பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

அம்பேத்கரின் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய நாள் அம்பேத்கர் ஒரு கூட்டத்தில் பேசினார். அவர் பேசும்போது, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்காவிட்டால், இந்த சுதந்திர கட்டிடத்தை மக்களே உடைத்து தரைமட்டம் ஆக்குவார்கள் என்று கூறினார். அரசியல் சாசனத்தின் மாண்புகள் முழுமையாக அமலுக்கு வந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும். இந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதே எனது அரசியல் நோக்கம்.

எதிரொலிக்க வேண்டும்

நாங்கள் ஆட்சிக்கு வந்திருப்பதே, அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு தான் என்று மத்திய மந்திரியாக இருந்த அனந்தகுமார் ஹெக்டே கூறினார். ஆனால் அவர் மீது பிரதமர் மோடியோ அல்லது உள்துறை மந்திரி அமித்ஷாவோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நாங்களும், நீங்களும் சேர்ந்து, அரசியல் சாசனத்தை மாற்றுவதாக கூறியவர்களை மாற்றியுள்ளோம்.

இந்த சட்டசபை தேர்தல் முடிவு வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும். நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதற்கான தேதியையும் அறிவித்துவிட்டோம். ஆனால் காங்கிரசின் இந்த உத்தரவாத திட்டங்களை தோற்கடிக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

மக்களுக்கு கிடைக்கும்

கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் 85 சதவீத குடும்பங்களை சென்றடையும். மற்ற திட்டங்களும் மாநிலத்தின் பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கும். பா.ஜனதாவினர் மனுஸ்மிருதியை போற்றுகிறவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அரசியல் சாசனத்திற்கு எதிரானவர்கள். அதிகாரத்திற்காக அந்த கட்சிக்கு சென்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள், மனுஸ்மிருதியை ஆராதித்து அரசியல் சாசனத்தை எதிா்த்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story