இந்திய பிரிவினைக்கு நேருவை குறிப்பிட்டு பா.ஜ.க. வீடியோ வெளியீடு; காங்கிரஸ் பதிலடி


இந்திய பிரிவினைக்கு நேருவை குறிப்பிட்டு பா.ஜ.க. வீடியோ வெளியீடு; காங்கிரஸ் பதிலடி
x

இந்திய பிரிவினைக்கு முன்னாள் பிரதமர் நேருவை இலக்காக கொண்டு பா.ஜ.க. வெளியிட்ட 7 நிமிட வீடியோவுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்து உள்ளது.

புதுடெல்லி,



இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினை உண்டானது. இதுபற்றி பிரதமர் மோடி கடந்த ஆண்டு குறிப்பிடும்போது, பிரிவினையின் வலியை ஒருபோதும் மறந்து விடமுடியாது.

நமது லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் புலம் பெயர்ந்தனர். முன்பின் யோசிக்காமல் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் வன்முறையால் எண்ணற்றோர் உயிரிழந்தனர். நம்முடைய மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் ஆகியவற்றின் நினைவாக ஆகஸ்டு 14-ந்தேதி பிரிவினை பயங்கர நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என கூறினார்.

இதனை தொடர்ந்து, அரசின் முடிவும் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் அரசின் முடிவு பற்றி பிரதமர் மோடி கூறும்போது, நாம் விடுதலையை கொண்டாடுகிறோம். ஆனால் பிரிவினையின் வேதனை இன்றளவும் இந்தியாவின் நெஞ்சை பிளந்து கொண்டு இருக்கிறது.

கடந்த நூற்றாண்டின் மிக பெரிய சோகங்களில் இதுவும் ஒன்று. பிரிவினையின்போது உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில், இந்திய மக்களின் வலி மற்றும் பாதிப்புகளை கவுரவிக்கும் வகையில், பிரிவினை பயங்கர நினைவுநாளை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம் என கூறினார். இதனையடுத்து, அந்த தினம் ஆகஸ்டு 14-ந்தேதி அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின்போது, உயிரிழந்த மக்கள் அனைவருக்கும் நான் இன்று அஞ்சலி செலுத்துகிறேன்.

நமது வரலாற்றின் சோகம் நிறைந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சூழலிலும், அதில் இருந்து மீண்டு மகிழ்ச்சியுடனும், வெற்றியுடனும் மற்றும் மனவுறுதியுடனும் உள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

நாட்டின் 2-வது பிரிவினை பயங்கரங்கள் நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சியை இலக்காக கொண்டு 7 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது.

அதில், பாகிஸ்தான் உருவாவதற்கான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக்கின் கோரிக்கைகளுக்கு முன்னாள் பிரதமர் நேரு தலைவணங்கி விட்டார் என குற்றம்சாட்டும் வகையில், காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

இதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுக்கும் வகையில் கூறும்போது, இந்த நாளை குறிப்பிடும் பிரதமர் மோடியின் உண்மையான நோக்கம் ஆனது, தற்போது நடந்து வரும் அரசியல் போரில், துயர் நிறைந்த வரலாற்று சம்பவங்களை தனக்கு சாதகம் ஆக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது. நவீன சாவர்க்கர்கள் மற்றும் ஜின்னாக்கள் தொடர்ந்து நாட்டை பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், இந்தியாவின் கலாசார மரபு, நாகரீகம், மதிப்புகள், புனித தலங்கள் பற்றி எதுவும் அறியாதவர்கள், நூறாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடையே 3 வாரங்களில் எல்லை கோட்டை வரைந்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரிவினையின் பயங்கரங்களை நினைவுகூரும் இந்த வீடியோ ஓடும்போது, நேருவின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

எனினும், ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, 2 நாடு கொள்கையை உருவாக்கியவர் சாவர்க்கர் என்பதே உண்மை. அதனை சரியாக செய்தவர் ஜின்னா. சர்தார் பட்டேல் எழுதும்போது, பிரிவினையை நாம் ஏற்காவிட்டால், இந்தியா பல துண்டுகளாக கூடும். முற்றிலும் அழிந்து விடும் என நான் உணர்கிறேன் என குறிப்பிட்டார் என தெரிவித்து உள்ளார்.



Next Story