பிரசாரத்தின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பா.ஜனதா வேட்பாளர்
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் உப்பள்ளி-தார்வார் கிழக்கு தொகுதியில் டாக்டரான கிராந்தி கிரண் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முதலில் அவர் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் நரம்பியல் சிறப்பு டாக்டராக பணியாற்றினார். பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது சொந்தமாக ஆஸ்பத்திரி வைத்து நரம்பியல் நோய்க்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்து வருகிறார். மேலும் ஏழைகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதுடன், ஏழைகளுக்காக இலவசமாக மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். பிரதமர் மோடியின் சாதனைகளை பார்த்து பா.ஜனதா கட்சியில் சமீபத்தில் அவர் இணைந்திருந்தார்.
இதையடுத்து, உப்பள்ளி-தார்வார் கிழக்கு தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தனது தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால், உடனடியாக வேட்பாளர் கிராந்தி கிரண் சிகிச்சை அளிக்கிறார். அத்துடன் பிரசாரத்தின் போது ஏழைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் அவர் வழங்கி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், 'நான் முதலில் டாக்டர். அதன்பிறகு தான் அரசியல்வாதி. பிரசாரத்தின் போது யாரும் உடல் நிலை சரியில்லை என்று கூறினால், அங்கேயே உடனடியாக சிகிச்சை அளிக்கிறேன். இது டாக்டராக இருக்கும் எனது கடமையாகும்' என்றார்.