தேர்தலில் டிக்கெட் கிடைக்காது என்பதால் அதிருப்தி; பா.ஜனதா- ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ராஜினாமா
பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களின் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.
பெங்களூரு:
ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.
ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தொகுதியில் இருந்து ஜனதாதளம் (எஸ்) சார்பில் போட்டியிட்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஏ.டி.ராமசாமி. அவர் சட்டசபையில் பேசும்போது, அரசு நில முறைகேடுகள் குறித்து வலுவாக குரல் எழுப்பி வருபவர். வருகிற சட்டசபை தேர்தலில் தனது தொகுதியில் போட்டியிட அவருக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்காது என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியில் உள்ள அவர், நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு விதான சவுதாவில் உள்ள சட்டசபை செயலாளர் வைஷாலியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மேலும் சபாநாயகர் அலுவலகத்திலும் வழங்கினார். இவர் காங்கிரசில் சேர்ந்து வருகிற தேர்தலில் போட்டியிடலாம் என தெரிகிறது.
கூட்லகி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.
அதேபோல் பல்லாரி மாவட்டம் கூட்லகி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ., என்.ஒய்.கோபாலகிருஷ்ணா. அவர் இந்த தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கட்சி மேலிட தலைவர்களிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு இதுகுறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் நேற்று பெங்களூருவில் சபாநாயகர் காகேரியை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
கட்சி மாறும் படலம்
பின்னர் என்.ஒய்.கோபாலகிருஷ்ணா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கட்சி மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட வேறு கட்சிகளுக்கு செல்லும் நோக்கத்தில் நான் பதவி விலகவில்லை. எனது தொகுதியில் உள்ளூர் பிரமுகர்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. அந்த குரலுக்கு வழிவிடும் நோக்கத்தில் நான் பதவி விலகியுள்ளேன்" என்றார்.
சட்டசபை தேர்தலையொட்டி எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கட்சி மாறும் படலம் தொடங்கிவிட்டது. ஏற்கனவே பா.ஜனதா எம்.எல்.சி. புட்டண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார். அவர் பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் துமகூரு மாவட்டம் குப்பி தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாஸ் ராஜினாமா செய்து காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. சிவலிங்கேகவுடாவும் அக்கட்சி மீது அதிருப்தியில் உள்ளார்.