கார் விபத்தில் முன்னாள் பெண் எம்எல்ஏ துடிதுடித்து பலி


கார் விபத்தில் முன்னாள் பெண் எம்எல்ஏ துடிதுடித்து பலி
x

முன்னாள் எம்.எல்.ஏ.வும், கர்னூல் அலுருவின் பாஜக பொறுப்பாளருமான நீரஜா ரெட்டி கார் விபத்தில் உயிரிழந்தார்.

ஐதராபாத்,

கர்னூலின் ஆலூர் பாஜக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாட்டீல் நீரஜா ரெட்டி தெலுங்கானா மாநிலம் பீச்சுபள்ளியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கடியல் ஜோகுலாம்பா மாவட்டத்தில் உள்ள இடிக்யாலா கிராமம் அருகே சாலை விபத்தில் சிக்கி, கர்னூலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். நீரஜா ரெட்டி ஐதராபாத்தில் இருந்து கர்னூலுக்கு சென்று கொண்டிருந்த போது, காரின் டயர் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோதண்டபுரம் போலீசார் கூறுகையில், 52 வயதான நீரஜா ரெட்டி ஐதராபாத்தில் இருந்து கர்னூலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாகச் சென்ற அவரது காரின் பின் டயர் திடீரென வெடித்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அதிவேகமாக தேசிய நெடுஞ்சாலை ஓட்டிய விவசாய நிலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய நீரஜா ரெட்டி உடனடியாக கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார் என கூறியுள்ளார்.

தேவனகொண்டா மண்டலத்தில் உள்ள தெர்னகல் கிராமத்தைச் சேர்ந்த நீரஜா ரெட்டி, 2009 பொதுத் தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் ஆலூரில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2019-இல் சிறிது காலம் ஒய்எஸ்ஆர்சிபி-இல் இணைந்தார், ஆனால் பின்னர் பாஜகவில் சேர்ந்து மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவரது கணவர் பாட்டீல் சேஷி ரெட்டியும் பதிகொண்டா எம்எல்ஏவாக பணியாற்றியவர், ஆனால் 1996ல் ஒரு பிரிவினர் தாக்குதலில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story