தலைமையை ஏற்க எடியூரப்பாவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அழைப்பு
எதிர்க்கட்சி, மாநில தலைவர் இல்லாததால் தலைமை ஏற்கும்படியும், கட்சியை முன்னெடுத்து செல்லும்படியும் எடியூரப்பாவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பெங்களூரு:-
எடியூரப்பாவுடன் ஆலோசனை
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஏற்கனவே சட்டசபை தேர்தல் தோல்வியில் இருந்து மீள முடியாமல் கர்நாடக பா.ஜனதா இருந்து வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர், மாநில தலைவர் நியமிக்கப்படாததால், கர்நாடக பா.ஜனதா தலைமை இல்லாமல் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் தீவிரம் காட்டுவதால், வேறு வழியில்லாமல் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை நாடி எம்.எல்.ஏ.க்கள் சென்ற வண்ணம் உள்ளனர். பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டுக்கு சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில், முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் அழைப்பு
அப்போது எதிர்க்கட்சி தலைவர், மாநில தலைவர் நியமிப்பது எப்போது, அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவது எப்படி? என்பது உள்ளிட்டவை குறித்து எடியூரப்பாவுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்த்தால் மட்டுமே சாத்தியம் என்றும் எடியூரப்பா கூறியதாக தெரிகிறது.
அதே நேரத்தில் எதிர்க்கட்சி, மாநில தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதாவை முன்னேடுத்து செல்லும்படியும், தலைமையை ஏற்கும்படியும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இக்கட்டான நிலை
பா.ஜனதா மேலிடம் சரியான நேரத்தில் முடிவு எடுத்து எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மாநில தலைவரை நியமிக்கும் என்றும், இந்த விவகாரத்தில் கட்சி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவதுடன், புதிய தலைவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தோல்வியில் இருந்து மீள முடியாமல் இருக்கும் பா.ஜனதாவுக்கு, தற்போது அதிருப்தி காரணமாக சில எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு தாவ முடிவு செய்திருப்பது இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.