மக்களவை இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம்
பர்த்ருஹரி மஹ்தாப் நாடாளுமன்றத்தின் மக்களவை இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை இடங்களான 272 இடங்களை பா.ஜனதா பெறவில்லை. 240 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்குதேசம் கட்சியின் 16 எம்.பி.க்கள் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 12 எம்.பி.க்கள் மற்றும் சில கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். மேற்கண்ட 2 பெரிய கூட்டணி கட்சிகளுக்கும் தலா 2 மத்திய மந்திரி பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஜூலை 3-ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் 2 நாட்களும் புதிய எம்.பி.க்களின் பதவியேற்பு நடக்கிறது.
இந்த நிலையில், மக்களவை இடைக்கால சபாநாயகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார். அதன்படி, ஒடிசா மாநிலம் கட்டாக் தொகுதி எம்.பி.யும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பர்த்ருஹரி மஹ்தாப் நாடாளுமன்றத்தின் மக்களவை இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொள்வார்கள்.