கர்நாடகத்தை பாதுகாக்க பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும்


கர்நாடகத்தை பாதுகாக்க பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும்
x

கர்நாடகத்தை பாதுகாக்க பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று மக்களுக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொழில் வளர்ச்சி

மோடி தான் பிரதமர் என்பதை மறந்து முதல்-மந்திரி வேட்பாளரை போல் பேசுகிறார். ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அவர் கூறியதையே மீண்டும் சொல்கிறார். இதில் வேதனையான விஷயம் என்னவெனில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஒரு திட்டத்தை கூட பா.ஜனதா அமல்படுத்தவில்லை என்பதே. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றுவதாக சொல்கிறது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கர்நாடகம் முதன்மை இடத்தில் தான் இருந்தது. இதை பா.ஜனதா ஆட்சியில் பாழாக்கிவிட்டனர்.

ஜி.எஸ்.டி வரி வசூலில் கர்நாடகம் தேசிய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் இருந்து ரூ.2½ லட்சம் கோடி வருமான வரி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் கா்நாடகத்தின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு கர்நாடகத்திற்கு ரூ.37 ஆயிரம் கோடி மட்டுமே வழங்குகிறது. இதுகுறித்து மோடி பேச வேண்டியது தானே?.

பறிக்க வேண்டும்

நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்திற்கு சாலை, ரெயில்வே திட்டங்களுக்கு குறைந்த அளவில் தான் நிதியை ஒதுக்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் வாகனங்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் சுங்க சாவடிகளில் இருந்து மத்திய அரசுக்கு ரூ.3,500 கோடி செல்கிறது. மோடி பிரதமரான பிறகு இந்தியாவை முதன்மை நாடாக மாற்றிவிட்டாரா?.

நாட்டில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் நோக்கம் அல்ல. ஏழை மக்களிடம் இருந்து வரி பெயரில் பணத்தை பறிக்க வேண்டும் என்பது அவரது நோக்கம். மோடி செயல்படுத்தியுள்ள திட்டங்களில் 98 சதவீதம் மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் திட்டங்களாக உள்ளது. உலக அளவில் பசி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 107-வது இடத்திலும், பாலின பாகுபாட்டில் 135-வது இடத்திலும், பத்திரிகை சுதந்திரத்தில் 161-வது இடத்திலும், சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் 77-வது இடத்திலும், மனிதவள மேம்பாட்டில் 132-வது இடத்திலும் உள்ளன.

இறக்குமதி செய்கிறோம்

சீனாவில் இருந்து நாம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது வெறும் ரூ.3 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தான். சமையல் கியாஸ் சிலிண்டர், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. அனைத்து நிலையிலும் மக்களை பா.ஜனதா சுரண்டுகிறது.

ஆஞ்சினேயரின் மண்ணாக இருக்கும் பல்லாரி மாவட்டத்தில் இரும்பு தாதுக்களை வெளிநாடுகளுக்கு விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு பா.ஜனதா கட்சியை வலுப்படுத்தினர். கர்நாடகத்தை அனைத்து வழிகளிலும் கொள்ளையடித்து இதை ஏ.டி.எம். ஆக மாற்றிக்கொண்டது பா.ஜனதா தான். கர்நாடகத்தை பாதுகாக்க வேண்டுமெனில் மக்கள் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story