சி.டி.ரவிக்கு பா.ஜனதா மாநில தலைவர் பதவி?


சி.டி.ரவிக்கு பா.ஜனதா மாநில தலைவர் பதவி?
x
தினத்தந்தி 25 July 2023 6:45 PM GMT (Updated: 25 July 2023 6:45 PM GMT)

சி.டி.ரவிக்கு கர்நாடக பா.ஜனதா மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு:-

கடுமையாக விமர்சித்தது

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜனதா தோல்வியை சந்தித்தது. அக்கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவடைந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 15 நாட்கள் நடைபெற்றது. ஆனால் எதிர்க்கட்சி தலைவரை பா.ஜனதா தேர்வு செய்யவில்லை. இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது.

கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில் பா.ஜனதாவில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் யாரும் இல்லை. மூட்டுவலி காரணமாக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலையில் உள்ளார். அதனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவா் பதவியை வழங்கும் மனநிலையில் பா.ஜனதா மேலிடம் இல்லை. கட்சியை அவரால் வெற்றி பெற வைக்க முடியவில்லை என்ற குறை அவர் மீது உள்ளது.

சி.டி.ரவி நியமனம்

கர்நாடக பா.ஜனதாவில் புதிதாக தலைவர்களை உருவாக்க பா.ஜனதா மேலிடம் முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா மாநில தலைவராக சி.டி.ரவியை நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராகவும், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளராகவும் இருக்கிறார். இளம் தலைவராக உள்ள அவர், இந்துத்துவா கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைத்து வருகிறார். மேலும் அவர் பலம் வாய்ந்த ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர். சமூக ரீதியாலும் சரி, கொள்கை ரீதியாகவும் சரி சி.டி.ரவி கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.

அதே போல் இந்துத்துவா 'பயர் பிராண்டு' என்று சொல்லக்கூடிய அளவுக்கு சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதில் புகழ் பெற்றவர் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.. அவர் முந்தைய பா.ஜனதா ஆட்சியின் போது பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், கட்சி மேலிடத்திற்கு எதிராகவும் பகிரங்கமாக கருத்துக்களை கூறி வந்தார். தனக்கு மந்திரி பதவி கிடைக்காதபோது, முதல்-மந்திரி பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.

நடவடிக்கை எடுக்கவில்லை

இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சிக்கு எதிராக எவ்வளவு கருத்துக்களை கூறினாலும் அவர் மீது பா.ஜனதா மேலிடம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்துத்துவா கொள்கையை எந்த விதமான தயக்கமும் இன்றி மிக தீவிரமாக வெளிப்படுத்தி வரும் பசனகவுடா பட்டீல் யத்னாலை எதிர்க்கட்சி தலைவராக்க பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருகிறது. அவர் பலம் வாய்ந்த லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story