அடுத்த மாதம் 3 கட்டங்களாக நடக்கும் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம்..!!
அடுத்த மாதம் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பா.ஜனதா தீவிர தயாரிப்புகளை தொடங்கி உள்ளது. இதில் முக்கியமாக மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 3 கட்டங்களாக நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அந்தவகையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநில தலைவர்களின் கூட்டம் ஜூலை 6-ந்தேதி கவுகாத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 7-ந்தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் வட மாநிலங்களின் தலைவர்களும், 8-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் தென் மாநில தலைவர்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்புகள் குறித்து விவாதிப்பதுடன், மோடி அரசின் 9 ஆண்டு நிறைைவயொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் சிறப்பு நிகழ்வுகளை குறித்தும் ஆய்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.
'சேவை, சிறந்த நிர்வாகம், ஏழைகளின் முன்னேற்றம்' என்ற கருப்பொருள் அடிப்படையில் இந்த கூட்டத்தில் விவாதங்கள் நடைபெறும் என பா.ஜனதா வட்டாரங்கள் கூறியுள்ளன.