நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு


நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு
x

நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்கள் நன்றாக செலவு செய்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு இது சரியாக தெரியாவிட்டால் நாடு அராஜக பாதையில் தான் செல்லும். இதற்கு நல்ல உதாரணம் இந்தியா.

மோடி பிரதமரான பிறகு கடந்த 8 ஆண்டுகளில் நமது நாட்டை சேர்ந்த 8 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியறேி இருக்கிறார்கள். நாட்டில் தற்போது இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிறகு வயதானவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா மாறிவிடும். அரசு துறைகளில் உள்ள காலியிடங்களையும் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. அதனால் இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மத பிரச்சினைகளை பா.ஜனதா எழுப்புகிறது. நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியால் வளர்ச்சியில் நாடு 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. நாடு அதல பாதாளத்தில் விழுந்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story