பா.ஜனதா ஆதரவாளர் கொலை; 4 பேர் கைது
பண்ட்வாலில் பா.ஜனதா ஆதரவாளர் கொலை; 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பொல்லாலியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா (வயது 50). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் பா.ஜனதா கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்தார். பண்ட்வால் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். ஜனார்த்தனா நேற்று முன்தினம் இரவு அம்முஞ்சே கிராமத்தில் உள்ள நேரு மைதானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இது குறித்து மங்களூரு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து விசாரித்தனர். அதில் முன்விரோதத்தில் 4 பேர் கும்பல் அவரை கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த மங்களூரு நகர போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னர் அவர்களின் பெயர், விவரங்கள் வெளியிடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.