பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. தேர்தல் குழு கூட்டம்- டெல்லியில் நடைபெற்றது
5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
புதுடெல்லி,
ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வருவதால் இந்த தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
இந்த 5 மாநிலங்களில் மத்தியபிரதேசத்தில் மட்டும் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் அரசையும், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். ஆட்சியையும் அகற்ற தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி வலுவான எதிர்ப்பை எதிர்கொள்ளும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது, வலுவான வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பொதுவாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூடும். ஆனால் 5 மாநில தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கூட்டத்தை முன்கூட்டியே நடத்த கட்சி தலைமை முடிவு செய்ததாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.