பா.ஜனதா கட்சி சொன்னதை செய்து முடிக்கும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
பா.ஜனதா கட்சி சொன்னதை செய்து முடிக்கும் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு-
பா.ஜனதா கட்சி சொன்னதை செய்து முடிக்கும் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல்
சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில் 72 தொகுதிகளுக்கு புதிய முகங்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த முறை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா கட்சிகள் புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. பா.ஜனதா கட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளை முன் வைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறோம். இதுவரை மத்திய, மாநில அரசு சார்பில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளோம். குறிப்பாக ரூ.5300 கோடி செலவில், பத்ரா மேலணை திட்டப்பணிகளை செய்துள்ளோம்.
மேலும் சிக்கமகளூரு பைராபுரா கணகட்டே கோந்தி நீராவரி திட்டம், ஹாசன் மில்க் யூனியன், சிக்கமகளூரு கோர்ட்டில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையில் உள்ள சாலைகள், புதிய மருத்துவ கல்லூரி ஆகிய திட்டப்பணிகளை முடித்துள்ளோம். சிக்கமகளூருவில் பாதாள சாக்கடை பணிகள் மட்டும் இன்னும் முடியவேண்டும். இதேபோல ரூ.9 கோடி செலவில் அம்பேத்கர் பவன் கட்டப்பட்டு வருகிறது. இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் இதுவரை எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை.
ரூ.8 ஆயிரம் கோடி முறைகேடு
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அர்காவதி லே அவுட் திட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. காங்கிரசை போன்று பொய் குற்றச்சாட்டுகளை கூற விரும்பவில்லை. சாதி, மத வேறுபாடு இன்றிதான் மக்களை வழிநடத்தி வருகிறோம். கட்சியிலும் அனைவருக்கும் சம மரியாதை கொடுத்து வருகிறோம். சிக்கமகளூரு திருவிழா, வரவு, செலவு குறித்து கணக்கு கேட்கின்றனர். கலெக்டரிடம் இது குறித்து நான் பேசியுள்ளேன். காங்கிரஸ் தலைவர்கள் கலெக்டர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் பொய்யானது. இதனை மக்கள் நம்பவேண்டாம்.
லிங்காயத் சமுதாய மக்களின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் என்று நான் எந்த இடத்திலும் கூறவில்லை. இதனை சிலர் அரசியலாக்க நினைக்கின்றனர். நந்தினி பால் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். நந்தினி பாலை, அமுல் பால் உற்பத்தி நிறுவனத்துடன் இணைக்கவில்லை. நந்தினி பால் நிறுவனம் தனித்து செயல்படும். இந்த தேர்தலில் பசவராஜ் பொம்மை தலைமையில் போட்டியிடுகிறோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும், நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை செய்து முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.