கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவில் அதிக பெண்களுக்கு டிக்கெட் கிடைக்கும்; மத்திய மந்திரி ஷோபா பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவில் அதிக பெண்களுக்கு டிக்கெட் கிடைக்கும்; மத்திய மந்திரி ஷோபா பேட்டி
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவில் அதிக பெண்களுக்கு டிக்கெட் கிடைக்கும் என்று மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.

பெங்களூரு:

மத்திய வேளாண் இணை மந்திரி ஷோபா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்களின் விருப்பம்

கர்நாடக பால் கூட்டமைப்பின் நந்தினி கர்நாடகத்தின் பெருமையான நிறுவனம். ஆனால் அமுல் பால் பொருட்கள் ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை. பொருட்களை வாங்குவது என்பது மக்களின் விருப்பம். ஆனால் நந்தினி நிறுவனம் இன்னும் வளர வேண்டும். சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உள்பட 4 முக்கியமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. இவற்றை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி நிதி வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மாதம் 10 கிலோ அரிசி வழங்குவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இதுவும் சாத்தியமில்லை. ராஜஸ்தானில் அக்கட்சி வழங்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு எவ்வளவு உணவு தானியங்கள் வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டியது அவசியம்.

உணவு தானியங்கள்

உடுப்பி பகுதியில் அரிசி கொடுத்தால் அதை சந்தையில் விற்பனை செய்கிறார்கள். அந்தந்த பகுதி மக்கள் சாப்பிடும் உணவு முறைக்கு ஏற்ப உணவு தானியங்களை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் அரசு வழங்கும் உணவு தானியங்கள் தவறாக பயன்படுத்துவது குறையும். அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்குகின்றன.

குறிப்பாக அன்ன பாக்கிய திட்டத்தில் மத்திய அரசின் மானியம் 90 சதவீதம் ஆகும். மீதமுள்ள 10 சதவீதத்தை தான் மாநில அரசு வழங்குகிறது. ஆனால் அன்ன பாக்கிய திட்டத்தை தான் கொண்டு வந்ததாக சித்தராமையா தம்பட்டம் அடித்து கொள்கிறார். மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க புரோட்டின் பவுடர் வழங்கும் பணியை தொடங்கியுள்ளோம்.

ஊட்டச்சத்து குறைபாடு

கர்நாடகத்தில் ராய்ச்சூரில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். அரிசி மூட்டைகளுடன் 15 கிலோ புரோட்டின் சத்து மாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பிறகு அந்த பகுதியில் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி வருவது தெரியவந்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட அதிக பெண்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு ஷோபா கூறினார்.

1 More update

Next Story