கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா 3 இடங்களில் வெற்றி; காங்கிரஸ் ஒரு இடம்
கர்நாடகத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது. ஒரு இடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது. ஒரு இடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது. ஜனதா தளம் (எஸ்) கட்சி தோல்வி அடைந்ததால் தேவேகவுடா, குமாரசாமி ஏமாற்றம் அடைந்தனர்.
கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு ஆளும் பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் குபேந்திரரெட்டி ஆகியோரும் போட்டியிட்டனர். கர்நாடக சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 122 உறுப்பினர்கள், காங்கிரசுக்கு 70 பேர், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 32 பேர் உள்ளனர்.
இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பா.ஜனதா வேட்பாளர்கள் நிர்மலா சீதாராமன்,
நடிகர் ஜக்கேஷ் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. 4-வது இடத்திற்கு மூன்று கட்சிகளிடமும் போதுமான எண்ணிக்கையில் வாக்குகள் இல்லை. இதையடுத்து பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) என மூன்று கட்சிகளும் தங்கள் வேட்பாளரை நிறுத்தின.
நம்பிக்கை பொய்யாகிவிட்டது
காங்கிரஸ் உபரி வாக்குகளை தங்கள் கட்சிக்கு வழங்குமாறு முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர். இதற்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு உபரி வாக்குகளை வழங்க யோசனை செய்த சோனியா காந்தி அந்த எண்ணத்தை மாற்றி கொண்டார்.
ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், காங்கிரஸ் தனது பிடியை விட்டு கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மனம் மாறி ஆதரவு வழங்குவார்கள் என்று தேவேகவுடா நம்பி இருந்தார். ஆனால் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் தேவேகவுடாவின் நம்பிக்கை பொய்யாகிவிட்டது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. பெங்களூரு விதான சவுதாவில் முதலாவது மாடியில் உள்ள 106-வது எண் கூட்ட அரங்கத்தில் ஓட்டுப்
பதிவு காலை 9 மணிக்கு தொடங்கியது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, குமாரசாமி மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து வாக்களித்தனர். ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைவதாக இருந்தது. ஆனால் வாக்காளர்களான 224 எம்.எல்.ஏ.க்களும் மதியம் 3 மணிக்குள் வாக்களித்துவிட்டனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்தல் நிறைவடைந்தது.
திட்டமிட்டப்படி ஓட்டு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு தொடங்கியது. இதில் பா.ஜனதா வேட்பாளர்கள் நிர்மலா சீதாராமன்,
நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் குபேந்திர ரெட்டி தோல்வி அடைந்ததால் அக்கட்சி தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் ஏமாற்றம் அடைந்தனர். ஜனதா தளம் (எஸ்) கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ஜி.டி.தேவேகவுடா, சிவலிங்கேகவுடா ஆகியோர் தங்கள் கட்சிக்கே வாக்களித்தனர்.
நுழைய தடை
மாநிலங்களவை தேர்தலையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பார்வையாளர்கள் மற்றும் மந்திரிகள்,
எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்கள் விதான சவுதாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. விதான சவுதாவில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ராஜஸ்தான்
இதேபோல் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது.
மராட்டியம், அரியானா
மராட்டியத்தில் 6 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 7 பேர் போட்டியிட்டனர். காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம், பா.ஜ.க.வுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும். ஆனால் 6-வது இடத்தை பெறுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே பலப்பரீட்சை ஏற்பட்டது. நேற்று நடந்த வாக்குப்பதிவின்போது, சிவசேனாவின் சுகாஸ் காண்டே, காங்கிரஸ் மந்திரி யஷோமதி தாக்குர், தேசியவாத காங்கிரஸ் மந்திரி ஜித்தேந்திர அவாத் வாக்களித்தபோது விதிகளை மீறியதாக பா.ஜனதா ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் அரியானாவில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் யாருக்கு ஓட்டுபோட்டோம் என்பதை அனைவரிடமும் காட்டினர். இது தேர்தல் விதிமீறல் என்று கூறி பா.ஜ.க. சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
ஓட்டு மாற்றி போட்ட ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.
ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த கோலார் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாச கவுடா காங்கிரசுக்கு வாக்களிப்பதாக நேற்று காலையே அறிவித்துவிட்டார். அதன்படி அவர் வாக்குச்சாவடிக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு சென்றார். அவருக்கு எதிராக குமாரசாமி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறுகையில், "அவருக்கு மரியாதை இருந்தால் உடனடியாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஜனதா தளம் (எஸ்) கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதை கோலார் மக்கள் குறிப்பாக ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் ஏற்க மாட்டார்கள். அவர் தொகுதி மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்" என்றார்.
வாக்கு பெட்டியில் காலி சீட்டு போட்ட எம்.எல்.ஏ.
ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த துமகூரு மாவட்டம் குப்பி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சீனிவாஸ் அக்கட்சி பணிகளில் இருந்து விலகியே உள்ளார். அவருக்கும், குமாரசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் காங்கிரசுக்கு வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தன்னிடம் குமாரசாமி ஆதரவு கேட்கவில்லை என்று அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று வாக்குச்சாவடிக்கு வந்த அவர், வாக்குச்சீட்டை பெற்று யாருக்கும் வாக்களிக்காமல் காலி சீட்டை வாக்கு பெட்டியில் போட்டுவிட்டு சென்றார். இதற்கும் குமாரசாமி கண்டனம் தெரிவித்தார்.
ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் பிடிவாதத்தால் பா.ஜனதாவுக்கு லாபம்
கர்நாடகத்தை பொறுத்தவரையில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தான் முக்கியமாக இருக்கின்றன. இதில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுகின்றன. பா.ஜனதா மதவாத கட்சி என்று எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் மதச்சார்பற்ற கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் பிடிவாதத்தால் அதன் பலன் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது. ஒருவேளை காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டு அமைத்திருந்தால் பா.ஜனதாவுக்கு 4-வது இடம் கிடைத்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேவண்ணா ஓட்டு நிராகரிப்பா?
மாநிலங்களவை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த ரேவண்ணா வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவர் தான் அளித்த வாக்கை தனது கட்சியின் ஏஜெண்டிடம் காட்டினார். அது அருகில் இருந்த காங்கிரஸ் ஏஜெண்டு டி.கே.சிவக்குமாருக்கும் தெரிந்துள்ளது.
இதையடுத்து ரேவண்ணா சட்ட விதிகளை மீறியதாகவும், இதனால் அவரது ஓட்டு செல்லாது என்று அறிவிக்கமாறும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டன. இதையடுத்து ரேவண்ணா வாக்களித்த காட்சிகள் அடங்கிய வீடியோவை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். அதில் அவர் விதிமீறலில் ஈடுபடவில்லை என்று கூறி காங்கிரஸ்,
பா.ஜனதா கட்சிகளின் வேண்டுகோளை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.