அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை; வேட்பாளரை திரும்ப பெற்றது
அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே அணி போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார்.இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜனதா வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு தெரிவித்து உள்ளார். அதேபோல், பாஜக வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இதே கோரிக்கையை விடுத்து இருந்த நிலையில், வேட்பாளரை திரும்ப பெறுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே அணி போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.