பட்ஜெட்டில் இலவச அறிவிப்புகளை வெளியிட பா.ஜனதா முடிவு
பெண்கள், மாணவர்கள், விவசாயிகளை கவரும் விதமாக பட்ஜெட்டில் இலவச அறிவிப்புகளை வெளியிட பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:-
இலவச அறிவிப்புகள்
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கும் இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதில் இருந்தே பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வாக்காளர்களை கவரும் விதமாக இலவச அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகிறது. அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச மின்சாரம், ரூ.2 ஆயிரம் உதவித் தொகை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால், எல்.கே.ஜி.யில் இருந்து 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும், ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுவதற்காக புதிய மருத்துவ திட்டம் கொண்டு வரப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் அறிவிக்க முடிவு
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள ஆளும் பா.ஜனதா கட்சியும் தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தல் வெற்றிக்காகவும், பிரசாரத்திற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடகத்திற்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை சந்திக்கும் விதமாக இலவச அறிவிப்புகளை அறிவித்திருப்பதால், அவர்களுக்கு பதிலடி கொடுக்க பா.ஜனதாவும் தயாராகி வருகிறது.
இதற்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் பெண்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகளை கவரும் விதமாக பல்வேறு இலவச அறிவிப்புகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.3 லட்சம் கோடியில்...
இலவச அறிவிப்புகளுக்கு எதிராக பிரதமர் மோடி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தாலும், மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்காகவும், காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கவும் பட்ஜெட்டிலேயே இலவசங்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை வெளியிட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக வீட்டுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்து, அதனை தேர்தலுக்கு முன்பாகவே செயல்படுத்தி, மக்கள் கையில் கிடைக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் ரூ.2 ஆயிரம் கிடைக்கும் என்ற நிலை மாறி, பா.ஜனதா ஆட்சியிலேயே ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளனர். இதுபோல், விவசாயிகள், மாணவ, மாணவிகளுக்கு பயன் அளிக்கும் விதமாக புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவித்து காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க பா.ஜனதாவும் தயாராகி வருவதாகவும், ரூ.3 லட்சம் கோடியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.