ரூ.120 கோடியில் பீதரில் 'பிளாக் பக்' மான்கள் சரணாலயம்


ரூ.120 கோடியில் பீதரில் பிளாக் பக் மான்கள் சரணாலயம்
x
தினத்தந்தி 7 July 2023 8:39 PM GMT (Updated: 8 July 2023 10:59 AM GMT)

பீதரில் ரூ.120 கோடியில் 'பிளாக் பக்' மான்கள் சரணாலயம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள வனம், பசுமை, சுற்றுச்சூழல் துறைக்கான திட்டங்கள் பற்றிய விவரம்:-

மனிதன்-காட்டுயானைகள் மோதலை தடுக்கவும், காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வருவதை தடுக்கவும் 520 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாள கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது. இதில் 312 கிலோ மீட்டர் தூர தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 208 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலி அமைக்கும் பணிக்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

காட்டு யானைகள் மனிதர்களை தாக்குவதை தடுக்க மைசூரு, மண்டியா, சிக்கமகளூரு, ஹாசன், குடகு மாவட்டங்களில் காட்டு யானைகள் செயல்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் ராமநகர், பன்னரகட்டா பகுதிகளில் புதியதாக காட்டு யானைகள் செயல்படை அமைக்கப்படும்.

வனவிலங்குகள் புனர்வாழ்வு மையம் மற்றும் சிகிச்சை மையங்கள் மைசூரு, பன்னரகட்டா பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. சிவமொக்கா, பெலகாவியில் வனவிலங்குகள் புனர்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.

பீதர் மாவட்டத்தில் பிளாக் பக் இன மான்கள் அதிகளவில் வசிக்கின்றன. எனவே அந்த இன மான்களை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் பிளாக் பக் மான்கள் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ேதசிய வனக் கொள்கை படி வனப்பகுதியில் 33 சதவீத புவியியல் பகுதி இருக்க வேண்டும். ஆனால் மாநிலத்தில் 17 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான புவியியல் பகுதி உள்ளது. இதை அதிகப்படுத்தும் வகையில் ஹசிருகர்னா நிகழ்ச்சிக்காக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கொள்கை, ஆராய்ச்சி கழகம் உத்தரவின் படி, அனைத்து அரசு திட்டங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், பசுமை உற்பத்தியை பெருக்கும் வகையிலும் மாநிலம் முழுவதும் பசுமை வீடு வாயு திட்டம் செயல்படுத்தப்படும்.


Next Story