ஜனநாயகத்திற்கு கருப்பு நாள்; ராகுல் காந்தி வழக்கு குறித்து மெகபூபா முப்தி கருத்து
அவதூறு வழக்கில் ராகுலின் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு கருப்பு நாள் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி? என்ற வகையில் பேசினார் என தகவல்கள் வெளிவந்து சர்ச்சை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அவர் மீது குஜராத் மாநில முன்னாள் மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ததில், ராகுல் குற்றவாளி என தீர்மானித்து, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பால் ராகுல் காந்தி எம்.பி பதவி பறிபோனது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுலின் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு கருப்பு நாள் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.