கர்நாடகத்தில் தாலுகா ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதலாக ரத்த சுத்திகரிப்பு கருவிகள்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்


கர்நாடகத்தில் தாலுகா ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதலாக ரத்த சுத்திகரிப்பு கருவிகள்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:34+05:30)

கர்நாடகத்தில் தாலுகா ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதலாக ரத்த சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு:

ரத்த சுத்திகரிப்பு

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சீனிவாஸ் மானே, மஞ்சுநாத் உள்பட பல்வேறு உறுப்பினர்கள் சுகாதாரத்துறை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அனைத்து தாலுகா ஆஸ்பத்திரிகளிலும் ரத்த சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 2 சுத்திகரிப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. சில ஆஸ்பத்திரிகளிகளுக்கு 6 கருவிகள் வரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு 30 ஆயிரம் நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது 60 ஆயிரம் எண்ணிக்கையாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

இந்த ரத்த சுத்திகரிப்புக்கு தேவையான கருவிகளை வழங்கும் பணியை மேற்கொள்ள 2 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில் ஒரு நிறுவனம் சரியாக செயல்படவில்லை. அதனால் சுமார் 80 தாலுகாக்களில் ரத்த சுத்திகரிப்பு கருவிகள் சரியான முறையில் செயல்படவில்லை. அதனால் அந்த நிறுவனத்தை நீக்கிவிட்டு வேறு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். 2 மாதத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தாலுகா ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதலாக ரத்த சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்படும். கர்நாடகத்தில் 107 ஆரம்ப சகாதார நிலையங்களை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் 100 துணை சுகாதார மையங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உன்சூரில் 100 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதத்திற்குள் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story