மராட்டியத்தில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய படகு: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா? - அரசு விளக்கம்


மராட்டியத்தில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய படகு: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா?  - அரசு விளக்கம்
x

மராட்டிய மாநிலத்தில் ராய்காட் கடற்கரையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் நின்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் ராய்காட் கடற்கரையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் நின்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மராட்டிய மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள கடலில், ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. படகு கண்டுபிடிக்கப்பட்ட இடம் மும்பையில் இருந்து 200 கிமீ தொலைவிலும், புனேவில் இருந்து 170 கிமீ தொலைவிலும் உள்ளது.

ராய்காட் ஹரிஹரேஷ்வர் கடற்கரை அருகே கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒரு படகில், உடைக்கப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இவ்விழாவின் போது மக்கள் இங்கு பெருமளவில் வருவார்கள். இந்நிலையில் பாதுகாப்பு ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமா என்ற அச்சம் எழுந்த நிலையில், ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த படகு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்துமாறு மராட்டிய முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ராய்காட் எம்எல்ஏ அதிதி தட்கரே செய்தியாளர்களிடம் கூறினார்.இந்த சம்பவம் குறித்து மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த படகு ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஹனா லார்டோர்கன் என்பவருக்கு சொந்தமானது. அவரது கணவர் ஜேம்ஸ் ஹோபர்ட் தான் படகின் கேப்டனாக இருந்தார். அந்த படகு மஸ்கட்டில் இருந்து ஐரோப்பா நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில், கடலில் ஏற்பட்ட அதிக அலை காரணமாக மிதந்து கரை ஒதுங்கியதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்:- கடந்த ஜூன் மாதம் அந்த படகில் என்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் விடப்பட்டது. படகு விபத்துக்குள்ளானதால் அதில் பயணித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் இப்போது அந்த படகு இங்கு கரை ஒதுங்கியதாக அவர் தெரிவித்தார்.


Next Story