கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளேகால்:-
சாம்ராஜ்நகர் மாவட்டம் உன்டிகாலா தாலுகாவில் உள்ளது பன்னாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களாக இந்த கோவில் உண்டியலில் இருந்த பணம் எண்ணப்படாமல் இருந்துள்ளது. வழக்கம்போல் பூசாரி, கோவில் நடையை சாத்தி விட்டு வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் கோவிலுக்குள் பூட்டை உடைத்து மர்மநபர்கள் சிலர் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றனர். காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி, உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், இதுகுறித்து அவர் உடனடியாக உன்டிகாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் போலீசார் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.