புதுமாப்பிள்ளை தீக் குளித்து தற்கொலை


புதுமாப்பிள்ளை தீக் குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 March 2023 11:00 AM IST (Updated: 21 March 2023 11:01 AM IST)
t-max-icont-min-icon

பில்லி சூனியம் வைத்திருப்பதாக கூறி புது மாப்பிள்ளை ஒருவர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்களூரு-

பில்லி சூனியம் வைத்திருப்பதாக கூறி புது மாப்பிள்ளை ஒருவர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை

தட்சிண கன்னடா மாவட்டம் விட்டலாவை அடுத்த கன்னியானாவைச் சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 33). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார் இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் சித்தகட்டேவை அடுத்த சங்கபெட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த பெண் 7 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மனைவியின் குடும்பத்தினர் மாந்திரீகத்தில் அதிகளவு நம்பிக்கையுடையவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஹரிஷிற்கு மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. மேலும் அவருக்கு மாந்திரீகம், பில்லி சூனியம் என்றால் பயம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் யாரோ அவரது சட்டை பையில், சாம்பல் மற்றும் இரும்பு வைத்துவிட்டு சென்றதாக கூறப் படுகிறது. இதை பார்த்து ஹரிஷ் பதற்றம் அடைந்தார்.

பில்லி சூனியம்

மேலும் யாரோ தனக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாக நினைத்தார். மேலும் பதற்றம் அடைந்து தனது உறவினரான கோணஜேவில் உள்ள ரமேஷ் என்பவரிடம் கூறினார். அவர் உடனே ஹரிஷை தனது வீட்டிற்கு வரும்படி கூறினார். அதன்படி நேற்று முன்தினம் ஹரிஷ், உறவினர் ரமேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு உறவினர்கள் அவரிடம் ஆறுதல் கூறினர். இருப்பினும் அவர் தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்திருப்பதாக கூறி புலம்பினார்.

இதை கேட்ட உறவினர்கள் அவரை சமாதானம் செய்தனர். ஆனால் அவர்கள் பேச்சை கேட்காமல், வீட்டிற்கு சென்ற அவர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவர் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்த உறவினர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் ஹரிஷிற்கு பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே உயிர்ழந்தார்

போலீசார் தீவிர விசாரணை

இது குறித்து கோணஜே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிஷ் தனக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாக நினைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

இதற்காக அவர் முன்கூட்டியே கையில் பெட்ரோல் எடுத்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த கோணஜே போலீசார் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story