கிழக்கு லடாக்கில் சீனா பாலம் கட்டி வருவது, 1960-களில் ஆக்கிரமித்த பகுதி- மத்திய வெளியுறவு அமைச்சகம்


கிழக்கு லடாக்கில் சீனா பாலம் கட்டி வருவது, 1960-களில் ஆக்கிரமித்த பகுதி- மத்திய வெளியுறவு அமைச்சகம்
x

கிழக்கு லடாக்கில் சீனா பாலம் கட்டி வரும் இடம், 1960-களில் இருந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஆக்கிரமிப்பை ஏற்கவில்லை

கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரி பகுதியில் சீனா 2-வது பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாங்காங் ஏரி பகுதியில் முந்தைய பாலத்துக்கு அருகே மற்றொரு பாலத்தை சீனா கட்டி வருவதாக வெளியான தகவலை பார்த்தோம். அந்த 2 பாலங்களும் கடந்த 1960-களில் இருந்து தொடர்ந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் அமைந்துள்ளன.

ஆனால், நமது பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதை நாம் ஏற்றுக்கொள்வது இல்லை. சீனா நியாயமின்றி சொந்தம் கொண்டாடுவதையும், கட்டுமான பணிகளையும் ஏற்றுக்கொள்வது இல்லை.

உன்னிப்பாக கண்காணிக்கிறோம்

காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா பலதடவை சொல்லி இருக்கிறது. நமது இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும்.

தேச பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, 2014-ம் ஆண்டில் இருந்து எல்லை அருகே சாலைகள், பாலங்கள் ஆகிய கட்டுமானங்களை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இவை பாதுகாப்பு தேவைக்கு மட்டுமின்றி, அந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன.

தேச பாதுகாப்பு தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் மத்திய அரசு உன்னிப்பாக கண்காணிக்கிறது. இறையாண்மையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் வலியுறுத்தல்

இதற்கிடையே, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சீனா பாலம் கட்டுவது ஒவ்வொருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய தீவிர பிரச்சினை.

பிரதமர் தனது சொந்த கவுரவத்தை மறந்து விட்டு, நாட்டை பற்றியும், எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். 'சீன ஆக்கிரப்பில் உள்ள பகுதி' என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறிய வார்த்தைகள் பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story