வியாபாரி மீது கொடூர தாக்குதல்; தடுக்க முயன்ற உறவினர் அடித்துக்கொலை


வியாபாரி மீது கொடூர தாக்குதல்; தடுக்க முயன்ற உறவினர் அடித்துக்கொலை
x

பெல்தங்கடியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வியாபாரி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. அதை தடுக்க வந்த அவரது உறவினர் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.

மங்களூரு;

வியாபாரி

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா சாந்திநகர் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே வசித்து வந்தவர் நாராயண நாயக்(வயது 47). வியாபாரியான இவர் கடைகளுக்கு பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றை வினியோகம் செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு சென்று பீடி, சிகரெட்டுகளை வினியோகம் செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்கள் திடீரென நாராயண நாயக்கை சரமாரியாக தாக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், எதற்காக என்னை தாக்குகிறீர்கள் என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி நாராயண நாயக்கை தாக்கினர்.

தப்பி ஓடிய கும்பல்

இதைப்பார்த்த நாராயண நாயக்கின் உறவினர் ஜாரப்பா நாயக்(57) அங்கு ஓடி வந்தார். அவர் அந்த கும்பல் நாராயண நாயக்கை தாக்குவதை தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பல், ஜாரப்பா நாயக்கையும் சரமாரியாக தாக்கியது.

அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதில் நாராயண நாயக், ஜாரப்பா நாயக் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுபற்றி நாராயண நாயக் மற்றும் ஜாரப்பா நாயக்கின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உஜிரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கொலை

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ஜாரப்பா நாயக் உயிரிழந்தார். நாராயண நாயக் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெல்தங்கடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த பெல்தங்கடி போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று பார்வையிட்டனர். பின்னர் ஜாரப்பா நாயக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜாரப்பா நாயக் மற்றும் நாராயண நாயக் ஆகிய இருவரையும் தாக்கியது அதே கிராமத்தைச் சேர்ந்த மனோகர், சந்திரகாந்த் நாயக், தீபக் ராய், ஹரிபிரசாத், விஜய், வைஷாலி உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது.

தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story