உடற்பயிற்சி சவாலில் வெற்றி பெற்றால் ரூ.10 லட்சம் பரிசு- ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..!!
நிறுவனத்தின் உடற்பயிற்சி இலக்கை அடையும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்பட இருக்கிறது.
பெங்களூர்,
பெங்களூரைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான செரோதா(Zerodha) தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உடற்பயிற்சியின் மூலம் உடல்நலனை சரியான அளவில் பேணும் ஊழியர்களுக்குப் ரூபாய் 10 லட்சம் பரிசு தொகையை அறிவித்துள்ளார். கொரோனா பெருந் தொற்றின் போது பல நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய தொடங்கினர்.
வீட்டில் இருந்தே வேலை பார்த்ததில் ஊழியர்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் மேல் உள்ள கவனம் குறைத்துள்ளதாக சிஇஓ நிதின் காமத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உடல் நலன் தொடர்பாக செரோதா நிறுவனம் அளித்துள்ள சவால்களைச் சரியாக கடைப்பிடிக்கும் நிறுவன ஊழியர்களுக்குப் பெரிய அளவில் ஊக்கத்தொகையும், அதில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என சிஇஓ நிதின் காமத் அறிவித்துள்ளார்.
இந்த சவால் குறித்து நிதின் காமத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒரு நாளைக்கு குறைந்தது 350 கலோரிகளை குறைப்பது தான் சவால் என்றும், இருப்பினும் இந்த இலக்கு மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் பிட்னஸ் டிராக்கர்களில், தினசரி இதற்கான இலக்குகள் அமைக்கப்படும் என்றும், இந்த இலக்கில் 90 சதவீதத்தை நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் அடையும் ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை போனஸாக பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சவாலில் வெற்றி பெறுபவர்களுக்கு குலுக்கல் போட்டி நடைபெறும் என்றும் அதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனவும் நிதின் காமத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதின் காமத் கூறுகையில், "ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்த்ததில் உடல் ஆரோக்கியத்தின் மேல் உள்ள கவனம் குறைத்துள்ளது. அதனால் இந்த புது வித செயல்கள் ஊழியர்களை உடல் பயிற்சி செய்யத் தூண்டும்" என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.