அதிர்ஷ்டத்தால் சித்தராமையா 2 முறை முதல்-மந்திரி ஆனார் -காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசவராஜ் ராயரெட்டி பேச்சு


அதிர்ஷ்டத்தால் சித்தராமையா 2 முறை முதல்-மந்திரி ஆனார் -காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசவராஜ் ராயரெட்டி பேச்சு
x

அதிர்ஷ்டத்தால் சித்தராமையா 2 முறை முதல்-மந்திரி ஆனார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசவராஜ் ராயரெட்டி கூறினார்.

பெங்களூரு, ஆக.4-

பா.ஜனதாவை பலப்படுத்தினார்

கொப்பல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான பசவராஜ் ராயரெட்டி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

எல்.கே.அத்வானி பா.ஜனதாவை பலப்படுத்தினார். ஆனால் மோடி பிரதமரானார். இதுபோல் சில நேரங்களில் அதிர்ஷ்டம் சிலருக்கு ஆதரவாக உள்ளது. சித்தராமையாவை பாருங்கள். அவர் காங்கிரசில் சேர்ந்த பிறகு அதிர்ஷ்டத்தால் 2 முறை முதல்-மந்திரி ஆகியுள்ளார். கட்சியில் இருக்கும் பழைய தலைவர்கள் என்ன நினைப்பார்கள்?. எல்லா நேரமும் ஒரு குறிப்பிட்ட நபருக்கே அதிகாரம் கிடைக்கிறது.

குமாரசாமி பயப்பட்டார்

என்னுடன் நடமாடி கொண்டிருந்தவர்கள் இன்று மந்திரிகளாக ஆகியுள்ளனர். தற்போது உள்ள சுமார் 20 மந்திரிகளின் தந்தைகளுடன் நான் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவன். ஆனால் இன்று எனக்கு முன்னால் அவர்கள் ஆணவத்தை காட்டுகிறார்கள். எஸ.ஆர்.பொம்மை காலத்தில் நான் எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருந்தேன். தேவேகவுடா ஆட்சியில் நான் மந்திரியாக இருந்தேன்.

அப்போது எனக்கு அருகில் குமாரசாமி நிற்கவே பயப்பட்டார். என்ன செய்வது?. முதல்-மந்திரியாக வர அவர்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளது. சில நேரங்களில் பலருக்கு மந்திரி ஆகும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. அதனால் மந்திரி வாய்ப்பு கிடைத்தவர்கள் பெரியவர்கள், நாங்கள் குறைவானவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒருவருக்கு சேவையாற்றும் மன்பான்மை இருக்க வேண்டும். அதிகாரம் வரும்-போகும். ஆனால் அதிகாரம் இருக்கும்போது சேவையாற்ற வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் ராயரெட்டி கூறினார்.

அளவுகோல் கிடையாது

பசவராஜ் ராயரெட்டியின் இந்த பேச்சு காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கலபுரகியில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "பதவிக்கு வர அரசியலில் தகுதியும், மூப்பும் அளவுகோல் கிடையாது. சமூக நீதி, மண்டல ரீதியிலான காரணங்கள் அடிப்படையில் மந்திரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது கலாசாரமாக மாறிவிட்டது. எனது கருத்துப்படி ஆட்சி நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் மந்திரிகளாக வர வேண்டும்" என்றார்.

முதல்-மந்திரி சித்தராமையா நீண்ட காலம் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்தார். அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2006-ம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story