ஐபோனும் வாங்கி தரவில்லை... கொடுத்த ரூ.72 ஆயிரத்தையும் திருப்பி தரவில்லை; பள்ளி மாணவனை சுட்டுக்கொன்ற டிரைவர்
வீட்டிற்குள் வந்த கார் டிரைவர் பிளஸ் 2 மாணவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியின் ஜாமியா நகர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் காலித். இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் முகமது அப்துல் என்ற சிறுவனுடன் பழகி வந்துள்ளார்.
இதனிடையே, தனக்கு ஒரு ஐபோன் வாங்கி தரும்படி காலித் பள்ளிச்சிறுவன் முகமதுவிடம் கூறியுள்ளார். மேலும், ஐபோன் வாங்குவதற்காக முகமதுவிடம் அவர் 72 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால், காலித்திற்கு ஐபோனையும் வாங்கி கொடுக்காமல் 72 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் சிறுவன் முகமது அலைக்கழித்துள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த கார் டிரைவர் காலித் நேற்று மாலை சிறுவன் முகமதுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, வீட்டில் இருந்த சிறுவன் முகமதுவை தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை கொண்டு காலித் சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். துப்பாக்கிச்சத்தம் கேட்டு சிறுவனின் அண்ணன் வருவதற்குள் டிரைவர் காலித் தப்பியோடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற கார் டிரைவர் காலித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.