'ருபே' டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி திட்டம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்


தினத்தந்தி 12 Jan 2023 12:00 AM GMT (Updated: 12 Jan 2023 12:03 AM GMT)

'ருபே' டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

அதில், இந்திய தயாரிப்பான 'ருபே' டெபிட் கார்டுகள் மற்றும் 'பீம்' யு.பி.ஐ. செயலி மூலம் பண பரிமாற்றம் செய்வதை ஊக்குவிக்க ரூ.2 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நடப்பு நிதிஆண்டில், பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் மற்றும் ஆன்லைன் வணிகத்தில் 'ருபே' கார்டு மற்றும் 'பீம்' செயலியை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்வதை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

இது, மின்னணு பண பரிமாற்ற முறையில் இந்தியா அடைந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாய விளைபொருட்கள், விதைகள், ஏற்றுமதி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக 3 புதிய கூட்டுறவு சங்கங்களை அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தது.

தேசிய ஏற்றுமதி சங்கம், தேசிய ஆர்கானிக் பொருட்கள் கூட்டுறவு சங்கம், தேசிய அளவிலான பன்மாநில விதை கூட்டுறவு சங்கம் என்ற பெயர்களில் இந்த சங்கங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய குடிநீர், சுகாதார நிலையத்துக்கு ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி பெயரை சூட்ட மத்திய மந்திரிசபை முன்தேதியிட்டு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


Next Story