தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு; கர்நாடக அரசு உத்தரவு


தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு; கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:46 PM GMT)

கர்நாடகத்தில் தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

உள் இடஒதுக்கீடு

கர்நாடகத்தில் தலித் சமூகத்தில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. அதாவது, ஆதிதிராவிடர், ஆதி அந்தா, ஆதி கர்நாடகா, அஜிலா அருந்ததியர், அய்யனவர், பைரவா, பகுடா, பன்டி, பதடா, பெல்லாரா, பரதர், போயன், சக்கிலியன், சாமார், கடையன், கக்கலன் உள்பட 68 உட்பிரிவு சாதிகள் உள்ளன. கர்நாடகத்தில் ஆதிதிராவிடர் சமூகத்திற்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஒதுக்கீட்டு அளவு தற்போது 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலித் சமூகத்தில் உள்ள உட்பிரிவினர், தங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட நாளாக கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து மாநில அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, தலித் சமூகத்தில் உள்ள உட்பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.

மந்திரிசபை துணை குழு

அந்த குழுவின் பரிந்துரைப்படி தலித் உட்பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். அந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தலித் அமைப்பினர், சுதந்திர பூங்காவை தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். சிலரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்து இருந்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக அரசு தலித் சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய சட்டத்துறை மந்திரி மாதுசாமி தலைமையில் மந்திரிசபை துணை குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த குழுவில் உறுப்பினர்களாக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், மீன்வளம், துறைமுகத்துறை மந்திரி எஸ்.அங்கார், கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த துணை குழுவுக்கு தேவையான உதவிகளை சமூக நலத்துறை வழங்கும் என்று அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


Next Story