மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன்... நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன் - உத்தவ் தாக்கரே
மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன் என்றும், என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன் என்றும் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டார். கவர்னர் உத்தரவுக்கு எதிராக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே பேஸ்புக் வாயிலாக உரையாற்றிய மராட்டிய முதல் மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "நான் எதிர்பாராத விதத்தில் பதவிக்கு (அதிகாரத்திற்கு) வந்தேன், இப்போது அதே பாணியில் வெளியே செல்கிறேன். நான் நிரந்தரமாகப் போகப் போவதில்லை, இங்கேயே இருப்பேன், மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன். நான் எனது முதல்-மந்திரி மற்றும் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்கிறேன்
என்னை ஆதரித்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிவசேனா, அனில் பராப், சுபாஷ் தேசாய் மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோரிடமிருந்து, இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டபோது இந்த நபர்கள் மட்டுமே இருந்தனர், அதே நேரத்தில் என்சிபி மற்றும் காங் மக்களும் இந்த திட்டத்தை ஆதரித்தனர்
அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத்தை தாராஷிவ் என்றும் அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றியதில் நான் திருப்தி அடைகிறேன்" என்று உத்தவ் தாக்கரே தனது உரையில் தெரிவித்துள்ளார்.