கடந்த 16 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட முடியுமா? - பா.ஜனதாவுக்கு, சித்தராமையா சவால்
கடந்த 16 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட முடியுமா? என்று பா.ஜனதாவுக்கு, சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக முதல்-மந்திரியாக நான் இருந்தபோது, மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சி செய்தது. அப்போது கர்நாடகத்தில் 10 சதவீத கமிஷன் புகார் எழுந்தது. இதையடுத்து அந்த கால கட்டத்தில் சுமார் 8 ஊழல் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் மாநில பா.ஜனதா மந்திரிகள் மீது 40 சதவீத கமிஷன் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் அதுகுறித்து முறையான போலீஸ் விசாரணைக்கு கூட மத்திய, மாநில அரசுகள் உத்தரவிடவில்லை. எனது ஆட்சி காலம் உள்பட கடந்த 16 ஆண்டுகளில் கர்நாடகத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட முடியுமா?. அதற்கு பா.ஜனதாவுக்கு தையரிம் உள்ளதா?.
இவ்வாறு அவர் கூறினார்.