திடீர் வெள்ளத்தில் காருக்குள் சிக்கிக்கொண்ட பெண் - துணிச்சலாக மீட்ட உள்ளூர் மக்கள்
ஆற்றின் கரையோரம் காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார்.
சண்டிகர்,
மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்முவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள மதவழிபாட்டு தலத்திற்கு வழிபாடு செய்ய பெண் தனது குடும்பத்துடன் இன்று காரில் வந்தார். காரை மதவழிபாட்டு தலத்திற்கு அருகே உள்ள கவுகர் ஆற்றுப்படுகையில் நிறுத்திவிட்டு வழிபாடு நடத்த சென்றனர்.
அப்போது கனமழை காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காரை ஆற்றுப்படுகையில் இருந்து வெளியே எடுக்க அப்பெண் முயற்சித்துள்ளார். ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அந்த பெண் காருக்குள் சிக்கிக்கொண்டார்.
இதையறிந்த உள்ளூர் மக்கள் ஆற்று வெள்ளத்தில் காருக்குள் சிக்கிக்கொண்ட பெண்ணை கயிறு மூலம் மீட்டனர். இந்த மீட்பு பணியில் உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆற்று வெள்ளத்தில் காருக்குள் சிக்கிய பெண் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த காரை மீட்கும்பணியில் தீயணைப்பு மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.