'தசரா விழாவில் 13 முறை தங்க அம்பாரியை சுமந்த பலராமா' யானையின் உடல்நிலை கவலைக்கிடம்
தசரா விழாவில் 13 முறை தங்க அம்பாரியை சுமந்த ‘பலராமா’ யானையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மைசூரு-
தசரா விழாவில் 13 முறை தங்க அம்பாரியை சுமந்த 'பலராமா' யானையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதற்கு கால்நடை மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தசரா விழா
மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றது. தசரா விழாவின்போது நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலம் உலக பிரசித்தி பெற்றதாகும். 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு ஒரு யானை வீறுநடைபோட்டு செல்ல மற்ற யானைகள் அதை பின்தொடர்ந்து செல்வது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
இதுவரை 400 ஆண்டுகளுக்கும் மேல் தசரா விழா நடந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்த நிலையில் தசரா விழாவில் 13 முறை 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை 'பலராமா' யானை சுமந்திருக்கிறது.
'பலராமா' யானை
அதாவது கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 'பலராமா' யானை தங்க அம்பாரியை சுமந்திருக்கிறது. மேலும் இந்த யானைப் பற்றி வனத்துறை அதிகாரிகள் ஹரீஷ் குமார், ரத்னாகர் ஆகியோர் கூறியதாவது:-
பலராமா யானை கடந்த 1987-ம் ஆண்டு குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா கட்டேபுரா வனப்பகுதியில் பிடிபட்டது. அதன்பிறகு அதை மைசூரு மாவட்டம் உன்சூர் தலௌகாவில் உள்ள நாகரஒலே வனப்பகுதியில் அமைந்திருக்கும் பீமனகட்டே யானைகள் முகாமில் வைத்து பராமரித்து வருகிறோம்.
1999-ம் ஆண்டு...
மிக கம்பீரமாக காட்சி அளிக்கும் 'பலராமா' ஆண் காட்டுயானைகளுக்கு ஆக்ரோஷம் இல்லாமல் அமைதியாக அனைவருடன் பழகி வந்தது. இதனால் அதற்கு நாங்கள் கும்கி பயிற்சி அளித்தோம். 1994-ம் ஆண்டு முதல் 'பலராமா' யானை தசரா ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டது. அந்த சமயத்தில் தசரா ஊர்வலத்தில் தங்க அம்பாரியை துரோனா யானை சுமந்து வந்தது.
கடந்த 1999-ம் ஆண்டு துரோனா யானை இறந்துபோனது. இதனால் அந்த ஆண்டு தங்க அம்பாரியை சுமக்க 'அர்ஜூனா' யானை தயார் படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் அர்ஜூனா யானை 5,600 கிலோ எடையும் இருந்தது. ஆனால் திடீரென அர்ஜூனா யானை தனது பாகன் அண்ணய்யாவை கொன்றது. இதனால் தங்க அம்பாரியை சுமக்க வைக்கும் திட்டத்தில் இருந்து அர்ஜூனா யானை விடுவிக்கப்பட்டது.
அனைவரின் பார்வையையும் கவர்ந்தது
அதையடுத்து 'பலராமா' யானை தேர்வு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் பலராமா யானை 4,535 கிலோ எடை தான் இருந்தது. இருப்பினும் அது கம்பீரமாக இருந்தது. 2.7 மீட்டர் உயரமும் கொண்டிருந்தது. அதனால் பலராமா யானையை தேர்வு செய்தோம். அதன்பேரில் 1999-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 'பலராமா' யானை தங்க அம்பாரியை சுமந்து அனைவரையும் கவர்ந்தது.
சாதுவாகவும், கம்பீரமாகவும், அனைவருடன் நெருங்கி பழகியும் கவனத்தை ஈர்த்தது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தசரா விழாவில் பலராமா யானை தான் அனைவரின் பார்வையையும் கவர்ந்ததாக கூறப்பட்டது.
காய்ச்சல்
பின்னர் அதற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும், வயது முதிர்வு காரணமாகவும் தங்க அம்பாரியை சுமக்கும் திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதாவது 'பலராமா' யானை 1958-ம் ஆண்டு பிறந்தது. 2012-ம் ஆண்டு அது 54 வயதை எட்டியதால் அதற்கு தசரா விழாவில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னர் அது பீமனகட்டே யானைகள் முகாமிலேயே பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அதற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன் வாயில் புண் ஏற்பட்டு தீவிரமாக காய்ச்சல் அடிக்கிறது. அதன் ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். அதன் முடிவு வந்த பின்னரே அது எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவரும்.
கவலைக்கிடம்
தற்போது டாக்டர் ரமேஷ் தலைமையிலான கால்நடை மருத்துவக்குழுவினர் அங்கேயே முகாமிட்டு 'பலராமா' யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அந்த யானை எதையும் உட்கொள்ளாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டிருக்கிறது. அதன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அது மிகவும் சோர்வாக காட்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.