கார்கள் மோதல்; பெண் உள்பட 3 பேர் பலி


கார்கள் மோதல்; பெண் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 6:45 PM GMT)

பெங்களூரு-மைசூரு இடையேயான 10 வழிச்சாலையில் நேற்று 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

பெங்களூரு:-

10 வழிச்சாலை

பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இதுவரை ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். அதுபோல் நேற்றும் இந்த சாலையில் ஒரு விபத்து நடந்துள்ளது. அதில் 3 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

பெங்களூருவில் வசித்து வந்தவர் நீரஜ்குமார்(வயது 47). இவரது மனைவி செல்வி. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ்குமார் கடந்த பல வருடங்களாக பெங்களூருவில் வசித்து வந்தார். நேற்று காலையில் அவர் தனது மனைவி செல்வியுடன் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு புறப்பட்டார்.

3 பேர் பலி

அவர்கள் வாடகை கார் ஒன்றில் புறப்பட்டு சென்றனர் .காரை மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் நிரஞ்சன்(35) ஓட்டினார். அவர்களது கார் பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலையில் மண்டியா மாவட்டம் மத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் மழையும் பெய்தது. அப்போது எதிர் ரோட்டில் வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் அந்த கார் தடுப்புக்கட்டை மீது மோதி எதிர் ரோட்டுக்கு வந்தது. மேலும் அந்த கார் நீரஜ்குமார் சென்று கொண்டிருந்த கார் மீது பயகரமாக மோதியது. இந்த விபத்தில் நீரஜ்குமார் சென்ற கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட நீரஜ்குமார், அவரது மனைவி செல்வி மற்றும் கார் டிரைவர் நிரஞ்சன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தீவிர சிகிச்சை

விபத்துக்கு காரணமான காரில் வந்தவர்கள் படுகாயம் அடைந்தார்கள். அவர்கள் மண்டியா மாவட்ட மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மத்தூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story