வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக காந்திநகர் தொகுதி சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் 3 பேர் மீது வழக்கு
பெங்களூரு காந்திநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள்
பெங்களூரு காந்திநகர் சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் மந்திரி மாலூர் கிருஷ்ணய்ய ஷெட்டி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு முன்பாக கிருஷ்ணய்யா ஷெட்டிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி, அவரது ஆதரவாளர்கள் 3 பேர் பணப்பட்டுவாடா செய்தது தாமதமாக வெளியே வந்துள்ளது.
இதுதொடர்பாக மாலூர் கிருஷ்ணய்ய ஷெட்டியின் ஆதரவாளர்களான சந்திரசேகர், வெங்கடேஷ் மற்றும் வசந்த்குமார் ஆகிய 3 பேர் மீது அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது காந்திநகர் தொகுதியில் உள்ள கப்பன்பேட்டை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக 3 பேர் மீதும் வழக்குப்பதிவாகி இருக்கிறது.
20 ரூபாய் நோட்டுக்கு ரூ.2000
அதாவது நூதன முறையில் அவர்கள் பணப்பட்டுவாடா செய்திருந்தனர். வாக்காளர்களிடம் வெறும் 20 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, அந்த நோட்டை தாங்கள் கூறும் நபரிடம் கொடுத்தால், அவர் ரூ.2 ஆயிரம் கொடுப்பார் என்று கூறி இருந்தார்கள். அதன்பேரில், பல்வேறு வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.2 ஆயிரம் வாங்க முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்களிடம் 20 ரூபாய் நோட்டுகள் 8 எண்ணம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
3 பேர் மீது வழக்கு
இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹவாலா மாதிரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சிகள் நடந்துள்ளது. 20 ரூபாய் நோட்டை வாக்காளர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் கூறும் இடம், சம்பந்தப்பட்ட நபரை சந்தித்து ரூ.2 ஆயிரம் மற்றும் சில பரிசுகளை பெற்று கொள்ளும்படி அறிவுறுத்தி இருந்தார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரியான ரவிகுமார், அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தற்போது கோர்ட்டில் முறையான அனுமதி பெற்று சந்திரசேகர், வெங்கடேஷ், வசந்த்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.