எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சிபிஐ விசாரணையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டடு உள்ளது
புதுடெல்லி
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது.
2018ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ் பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக எடப்பாடிக்கு எதிராக ஆர். எஸ் பாரதி புகார் கூறினார். சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சுப்ரீம் கோர்ட்டு சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ம் இடைக்கால தடை விதித்த பின் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவே இல்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது. இதையடுத்து வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்தார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று சிபிஐ விசாரணையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மீண்டும் சென்னை ஐகோர்ட்டு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை சென்னை ஐகோர்ட்டு முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.