ரவுடி கொலையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு
பட்டப்பகலில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு-
பட்டப்பகலில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ரவுடி படுகொலை
விஜயாப்புரா மாவட்டம் சந்தாப்புரா காலனியை சேர்ந்தவர் ஹைதர் அலி நடாப். இவர் பிரபல ரவுடி ஆவார். இவரது மனைவி நகராட்சி கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் தனது வீட்டின் முன்பு காரில் ஏறி புறப்பட இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்மகும்பல் ஹைதர் அலி நடாப்பை விரட்டி, விரட்டி துப்பாக்கியால் சுட்டது. இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஹைதர் அலி நடாப், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
5 பேர் மீது வழக்கு
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும் கொலையாளிகளை விரைவாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடையதாக அந்த பகுதியை சேர்ந்த சேக் அகமது, தன்வீர்பிர், இக்பால்பீர், வஜீத்பீர் மற்றும் சன்வாஷ் டபேடார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.